search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக மீனவர்கள்"

    • மீனவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர்.
    • தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கோடிலிங்கம் (53). இவர்கள் 4 பேரும் மீனவர்கள்.

    நேற்று மாலை இவர்கள் அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க புறப்பட்டனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகில் 3 இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மீனவர்கள் படகில் ஏறி கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர்.

    பின்னர் மீனவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர்.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலால் மீனவர்கள் மணியன், கோடிலிங்கம், வேல்முருகன், சத்தியராஜ் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் காயத்துடன் வேக வேகமாக கரைக்கு திரும்பி உறவினர்களிடம் நடந்த விவரங்களை கூறினர். அதனை தொடர்ந்து 4 பேரும் ஆம்புலன்சில் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. தொடரும் அட்டூழியத்தால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதோடு மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
    • 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்றபோது ஒரு படகு, 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதே போன்று புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 விசைப்படகுகள், 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளது.

    இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடியது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையில் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. தற்போது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நடக்கும் இதுபோன்று நடக்கும் வேலைநிறுத்தத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிம்மதியின்றி தவிக்கின்றார்கள்.
    • தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இவர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிம்மதியின்றி தவிக்கின்றார்கள்.

    மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாணும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தையின் மூலம் முடிவெடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் எதிர்கால பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமேசுவரத்தில் இருந்து மட்டும் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதியாகும். இதில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் மீன்பிடி தொழிலில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த துறைமுகம் மூலமாக தினமும் மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் என சுமார் 1 லட்சம் பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

    மேலும் நாள்தோறும் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறுகிறது. இங்கு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் அதிக அளவில் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து மட்டும் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக இந்த மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் கச்சத்தீவை சார்ந்த பகுதியை நம்பியே உள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் என மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றால் பெரிய விசைப்படகுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். சிறிய படகுகள் என்றால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்ய வேண்டும்.

    மீனவர்கள் பிடித்து வரும் இறால், மீன், கணவாய், நண்டு, மற்ற மீன்களுக்கு அதிகளவில் வருவாய் கிடைத்தால் மட் டுமே தொடர்ந்து கட லுக்கு மீன்பிக்க செல்ல முடியும். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையின் தாக்குதல், விரட்டியடிப்பு மற்றும் கைது செய்யப்படும் நடவடிக்கை உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் கச்சத்தீவு அருகே கடற்படை கப்பல் களை சுற்றி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து படகுகளை இயக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்யவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவை ஒட்டிய இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்த சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    இது தொடர்பாக இந்திய-இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணவும், இலங்கைப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்யவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு அரசுடைமையாக்கப்பட்டது.

    கொழும்பு:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 22ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது செய்யப்பட்ட 12 பேரில் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகு அரசுடைமையாக்கப்பட்டது.

    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    • கச்சத்தீவில் புத்தர் கோவில்கள் அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.

    ராமேசுவரம்:

    தமிழகம்-இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்ச் 3, 4 தேதிகளில் திருவிழா நடத்தப்படும். இதில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பக்தர்களின்றி விழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள தமிழக மற்றும் இலங்கை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கடலோர பாதுகாப்பு படை போலீசார் சோதனைக்கு பின்னர் விழாவில் கலந்து கொண்டு திரும்பினர்.

    இந்த நிலையில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு சென்ற தமிழக மீனவர்கள் அங்கு 2 புத்தர் கோவில்கள் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    கச்சத்தீவில் புத்தர் கோவில் அமைக்கப்பட்டது மதமோதலை ஏற்படுத்த வழி வகுக்கும், எனவே அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் சார்லஸ் நிர்மலநாதன் எம்.பி. பேசி உள்ளார். அப்போது அவர், "அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ள கச்சத்தீவில் இலங்கை கடற்படை அமைத்த புத்தர் கோவில் களை உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    ராமேசுவரம் அருகே உள்ள வேர்க்கோடு பங்கு தந்தை தேவசகாயம் கூறும்போது, "கச்சத்தீவில் புத்தர் கோவில்கள் அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதனால் அந்தோணியார் ஆலய திருவிழா நடத்து வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

    • தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • நாகை, புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்களையும், இரு படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் அவர்களுக்குச் சொந்தமான 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை தலையிட்டு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை, புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்களையும், இரு படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் கடல் தொலைவில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை மக்கள் பங்கு கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழாவை விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று விமரிசையாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து 362 பெண்கள், 65 சிறுவர், சிறுமியர் என மொத்தம் 2,193 பேர் 59 விசைப்படகுகள், 11 நாட்டு படகுகளில் கச்சத்தீவுக்கு வந்தனர்.

    நேற்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அப்போது இருநாட்டு மக்களும் பங்குபெற்ற சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து 14 இடங்களில் சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானோர் சிலுவையை ஏந்தி ஆராதணை பாடல்களை பாடி வந்தனர். இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றி கொண்டார்கள். இரவு தேவாலயம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 2-வது நாளான இன்று காலை யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இருநாட்டு மக்கள் பங்கு பெற்ற திருப்பலியில் தமிழ், சிங்கள மொழியில் ஆராதனை பாடல்கள் பாடப்பட்டது.

    தொடர்ந்து உலக நன்மை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. அதன்பின்னர் கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள். முன்னதாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்திருந்தது.

    • கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர்.
    • கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.

    ராமேசுவரம்:

    இந்தியாவின் தென் எல்லையான ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக கைமாறியது.

    இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு வருடம் தோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடக்கும். 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்வது வழக்கம்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி கச்சத்தீவு திருவிழா எளிமையாக நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து மறை மாவட்ட பாதிரியார்கள் மட்டும் பங்கேற்றனர்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கச்சத்தீவு திருவிழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட இருநாட்டு மறைமாவட்ட பாதிரியார்கள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது.

    கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க விரும்புவோர் விபரங்களை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சேகரித்தது. அதன்படி கச்சத்தீவு திருவிழாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்து 408 பேர் செல்ல பதிவு செய்திருந்தனர்.

    கச்சத்தீவு திருவிழா இன்று (3-ந் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி ராமேசுவரத்தில் இருந்து பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் புறப்பட்டு சென்றனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன. 60 விசைப்படகுகள், 12 நாட்டு படகுகள் என மொத்தம் 72 படகுகளில் 2408 பேர் இன்று காலை முதல் கச்சத்தீவுக்கு சென்றனர்.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பக்தர்களின் கச்சத்தீவு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.

    மது பாட்டில்கள், பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அளவு இந்திய பணம் மற்றும் திண்பண்டங்கள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன.

    ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டன. படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு செல்லும் என தெரிவிக்கிறது.

    கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை எமலிபால் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது.

    அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் வருகிற 5-ந் தேதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளை இன்று சுங்கத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • வருகிற 3, 4-ந்தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் கல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் கல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது.

    இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலய திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி மாலை 4.30 மணிக்கு அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவு தேர்பவனி ஆகியவை நடக்கிறது.

    4-ந்தேதி காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. இதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 19 நாட்டுப் படகுகளில் 1,960 ஆண்களும், 379 பெண்களும், 38 ஆண் குழந்தைகளும், 31 பெண் குழந்தைகளும் கச்சத்தீவு செல்கின்றனர்.

    மொத்தம் 2 ஆயிரத்து 408 பேர் பதிவு செய்துள்ளனர். கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் அனைத்தும் நாளை மறுநாள் (3-ந்தேதி) காலை 8 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படுகின்றன. திருவிழாவுக்கு செல்ல ஏற்கனவே பதிவு செய்தவர்களின் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளை இன்று சுங்கத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படகுகள் பழுதின்றி உள்ளதா? சட்டவிரோத பொருட்கள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தினர். அதிகாரிகளின் இந்த ஆய்வு மற்றும் சோதனை நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (1-ந்தேதி) முதல் வருகிற 4-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதேபோல் வருகிற 3, 4-ந்தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா- இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • காதலர் தினத்தன்று பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என கூறிய விலங்குகள் நல வாரியம் ஒரு தன்னிச்சையான அமைப்பு.

    ஆலந்தூர்:

    இலங்கை, யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்று இருந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை சிறையில் நேற்றைய தினம் வரை தமிழக மீனவர்கள் யாரும் இல்லை. மீனவர்களின் படகுகளை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஏற்கனவே பேசி உள்ளோம்.

    கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா- இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளும் முன்வைத்துள்ள சில முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். காதலர் தினத்தன்று பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என கூறிய விலங்குகள் நல வாரியம் ஒரு தன்னிச்சையான அமைப்பு. பசுக்களை அரவணைக்கும் நோக்கில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×